உணர்வு மறக்கும் உறவுகள்.

ஆறேழு மாதமிருக்கும். ஒரு நாள் உரக்க என் பெயர் கூறி அழைத்தவாறே என் அறைக்குள் வந்தார் அந்த நப்ர். உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்குடா என்ற ஆத்மார்த்த சிரிப்புடன் கை கொடுத்தார். நீர்க்காவி வேட்டி. தோளில் மூக்குப் பொடி கறையுடன் ஒரு காசித் துண்டு. அழுக்கான சட்டை. கையில் ஒரு துணிப்பை.

ஆடை மட்டுமே அழுக்கு. நெடுநெடுவென்ற உடல்வாகு. மெலிந்த தேகம். மணக்கும் திருநீற்றுடன் 20வயது வாலிபனின் துடிப்போடு இருந்தவருக்கு வயது 80க்கு சமீபம் அல்லது கூட இருக்கலாம்.

தும்பைப்பூ வேட்டியும், ஆர்மிக்காரன் மடிப்பில் மடிப்பு கலையாத ஸ்லாக் ஷர்ட்டும், காலரில் அழுக்குப் படாமல் கைக்குட்டை வைத்தபடி கும்பகோணம் வெற்றிலையும், மூக்குப் பொடி வாசனையும், சித்தநாதன் விபூதியுமாய் மணந்தவரா இவர்?

மைப் பேனா தாண்டி, பால்பென் வந்த காலத்திலும் கட்டைப் பேனாவில் மைப்புட்டிக்குள் விட்டு தோய்த்து காலிக்ராஃப் மாதிரி  எழுதும் அச்சடித்த எழுத்துக்களின் சொந்தக்காரர். ஒரு அடித்தல், திருத்தல், பிழையிருக்காது.

ரிடையரானபின் வேறு ஊரில் இருந்தவர் மகனின் வற்புறுத்தலால் மகனுடன் வந்து விட்டதாகவும், மனு எழுதிக் கொடுப்பது, பத்திரிகையாரிசியருக்கு கடிதம், கன்ஸ்யூமர் கோர்ட் விவகாரங்கள் என்று சோம்பலின்றி உழைப்பதாகச் சொன்னார்.

யாராவது தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்களான்னு வந்தேன். நீயே இருக்க. சிரமம் பார்க்காமல் இதெல்லாம் கொஞ்சம் அட்டெஸ்ட் பண்ணிக் கொடுடா என்று 50-60 காகிதங்களை நீட்டினார். மகன் எப்படி பொறுப்பின்றி வீட்டு வரி, தண்ணீர் வரியெல்லாம் கட்டாமல், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட் கேட்காமல் இருக்கிறான் என்று செல்லமான வாஞ்சையுடன் கடிந்து கொண்டார். அதற்காகத்தான் இவ்வளவும் என்றார்.  எல்லாம் முடிந்து ஆசி கூறி கிளம்பியவரில் தந்தைக்கான ஒரு கர்வமிருந்தது.

இன்று டாய்லெட் சென்று வருகையில் காரிடாரில் மீண்டும் அவர். அருகில் சென்று வணக்கம் கூறியதும் வாடா என்றவரின் குரலில் நடுக்கம். கண்ணில் நீர் கோர்க்க, உதடு துடிக்க, போன 8ம் தேதி சூசைட் பண்ணிண்டிருப்பேண்டா. அரை மணி யோசிச்சேன். இருந்தவரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கலை. செத்துப் போய் போலீஸ் கேசுன்னு என்னால எதுக்கு கஷ்டம்னு இருந்துட்டேன் என்றபோது அதிர்ந்து போனேன்.

எம் பையன் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிட்டாம்பா. நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்காம். வயசான காலத்தில ஒரு மூலையில இல்லாம, எப்போப் பாரு எழுதறேன், படிக்கறேன்னு வீடு முழுக்க பேப்பர். இறைஞ்சி கிடக்காம். ஊர சுத்திண்டு வரன்னு சண்டை போட்டான். வீடு போறலை, மாடிக்கு ஏன் போறன்னு எல்லாம் சண்டை போட்டான்.

கட்டின வேட்டி, பனியனோடு வெளியே தள்ளிவிட்டான். காசு, என் பேங்க் பாஸ்புக், எல்லாம் எடுத்துக்கறேன். மாத்து துணி கூட இல்லாம எங்கடா போவேன்னு கேட்டா உள்ள வந்தா பெல்டால அடிப்பேன்னு பேரனை கூப்பிட்டு பெல்ட் கொண்டுவான்னு சொன்னாண்டா என்று கதறிவிட்டார்.

என் உயரத்துக்கு குறுகி, தோளில் சாய்ந்து கதறுபவரை என்ன சொல்லி நான் தேற்ற? ஏதும் பேசாமல் முதுகை நீவி விட்டபடி குரல் உடைய அழாதீங்க சார். புரிஞ்சிப்பாங்க என்ற போது மெதுவே தலை தூக்கி, போடா! அவன் புரிஞ்சிண்டு என்னாகப் போறது. என் வலி புரிஞ்சதே உனக்கு. உன் ஆறுதல் போறும் போடா.

நான் திரும்ப ஊருக்கு போறேன். வைஃப் பிள்ளையோடதான் இருப்பேன்னுட்டா. நான் 4 பேருக்கு சமைப்பேன். சாமி, பட்டா தர அலைய விடறான் சாமின்னு யாரோ வருவான். என் காலம் போய்டும். திரும்ப உன்னைப் பார்ப்பேனோ தெரியாது. 

தலையில் அடிபட்டு, சித்த சுவாதீனமில்லாத மகள் இருக்கிறாள். பென்ஷனுக்கு நாமினேஷன் கொடுத்துட்டேன். புக்குல எண்ட்ரி போடுன்னா, அந்த நேரம் வரும்போதுதான் மெடிகல் செக்கப் பண்ணி போடுவானாம். டிபார்ட்மெண்ட் ஆஃப் பென்ஷன், ரயில்வே போர்ட், ப்ரெசிடெண்ட்னு எழுதி கிழிக்க மாட்டேன்?

வயசான காலத்தில என்னமா அல்லாட விடறானுங்கடா. எப்பவாவது பேச தோணினா பேசறேன், செல் நம்பர் கொடு என்று வாங்கிக் கொண்டு நடந்தவரின் நடையில் அந்த மிடுக்கும் கர்வமும் காணவில்லை. தன்னம்பிக்கை மட்டும் குறையவேயில்லை.

நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.