கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள்.

ம்ம். கொச்சுக் கொச்சு சந்தோஷங்களில் கொஞ்சமே மாத்ரம் வலியும் கூடிய ஒன்னாணு இது. ஆம். மனச்சுமையைக் கொட்டித் தீர்க்க என்று ஆரம்பித்து பின்னூட்டப் புயலிலும் ஓட்டு மின்னலிலும் அலக்கழிந்து ஒரு வருடம் நிறைந்தாகி விட்டது.

ஊக்கங்கள் தந்த உந்துதல், இடித்துரைத்த  இதங்கள், அதையும் தாண்டி என்னாச்சு சார்? இடுகையைக் காணோம் என்ற அக்கறையான விசாரிப்புகள் கொச்சு சந்தோஷத்தில் ஒன்றாயிடினும், ஒரு சிலரின் எழுத்தின் வேகமும் தாக்கமும் எழுதினா இப்படி எழுதணும்,. நானும் எழுதுறேன்னு எழுதி என்னவாகப் போகிறது என்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தக் கொச்சு சந்தோஷங்களைத் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. திரும்பத் திரும்பச் சொன்னாலும் நன்றி பாராட்டத் திகட்டுமா என்ன? இந்த மகிழ்ச்சிக்கு காரணமான ப்ரியாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இனி அடுத்த கொசுவத்தி.

மாணவரணித்தலைவராக தி.கு.ஜ.மு.க.வில் பதவி கிடைத்ததிலிருந்து கட்சிப் பணிக்காக ஒதுங்கியிருந்த என்னை, முகிலப் பாண்டியர் (எளக்கிய அணித்தலைவர்..ஆமா! கலகலா கவிதைக்கு எதிர்கவுஜ 2 நாள்ள வரும்னு அறிவிப்பு என்னாச்சி தலைவரே!) தொடர் இடுகை எழுதி மாட்டிவைக்க முடிவு செய்துவிட்டார். அதிலும் கவனமிருப்பதை சொன்னால் போதும் என்ற உள்குத்து வைத்து என் மாணவரணிப் பதவியைத் தட்டிப் பறிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளதால், மீண்டும் களம் திரும்ப வேண்டிய கட்டாயம்.

பன்னிரண்டு வயது நிறையுமுன்னரே அப்பாவின் காரியத்துக்கு வந்திருந்த உறவுகள் அருகில் அழைத்து, இனி நீ குழந்தையில்லை. குடும்பத் தலைவன். கம்மனாட்டி வளர்த்த பிள்ளை கழுதைக் குட்டி என்ற பெயரெடுக்காமல் நல்ல பிள்ளையாக வளரவேண்டும் என்று சொன்ன போது டீனேஜுக்கான சுதந்திரம் அனைத்தும் பிடுங்கப்பட்டது புரியாத வயது.

படித்தது இரயில்வேத் தொழிளாளர்களுக்கான உதவி நிலைக் கல்விக் கூடம். கோ எஜுகேஷன் பள்ளிதான். எட்டாவது படித்தால்தான் ரயில்வேயில் வேலை வாங்கலாம் என்ற குறிக்கோளில் அனுப்பப்பட்ட பிள்ளைகள் அதிகம். பதினொன்றாம் வகுப்புக்கு பரிட்சைக்கும் S.S.L.C. புத்தகத்துக்கும் மட்டுமே பதினைந்து ரூபாய் ஃபீஸ் கட்டும் வசதி. அருகிலிருந்த இரண்டு பள்ளிகளில் இந்தப் பள்ளியில் ரவுடித்தனம் குறைவு என்பதாலும், அப்பாவின் அலுவலகத்துக்கு பின்புறம் என்பதும் காரணமாயிற்று.

பெரும்பான்மை மாணவ மணிகள் முரட்டுப் பெற்றோர்களின் முரட்டு வாரிசுகள் என்பதால் அவர்களைத் திருத்துவதை விட எங்களைப் போல் ஏப்பசாப்பைகளை காப்பாற்றி கரை சேர்ப்பதே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாய் ஆனது. ஆக பள்ளி என்பது சண்டியர்களுடனான சர்வைவலுக்கு ஓர் வழிகாட்டியாக அமைந்து போனது.

எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குத் திரும்பிய போது பெரும்பாலான மாணவிகள் அக்காவாகவும் மாணவர்கள் அண்ணாவாகவும் வளர்ந்திருக்க காரணம் புரிந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்பில் டீச்சர் போர்டில் எழுதுகையில் குரங்கு மாதிரி டெஸ்க் மீதேறித் தாவும் சுகுணா ஒன்பதாம் வகுப்பில் தலை குனிந்து ஓரக்கண்ணால் ஜானகிராமனைப் பார்த்து உதடு சுழிப்பதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது.

பத்தாவது படிக்கையில் புதிதாக வந்த தமிழாசிரியர் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்து, தலைமை விருந்தினராக ஒரு மடத்தலைவரை அழைத்திருந்தார். மார்பு முழுதும் சந்தனம் பூசி, மஞ்சள் உடையோடும் தலைப்பாகையோடும் சங்கத்தமிழ் அழகு சொல்லி, வீட்டிற்கு வரும் தலைவன் தன் குழந்தையைக் கொஞ்சத் தூக்க தலைவி பாய்ந்து வந்து பிடுங்கிக் கொண்டு, தலைவன் பரத்தையர் வீட்டிலிருந்து வருவதால் அவள் பூசிய சந்தனம் மார்பில் இருப்பதாகவும், அது குழந்தையின் கால் பட்டு அழிந்தால் அவள் சபிப்பாள் என்றும் விளக்கிக் கொண்டிருக்க, கூட்டத்தில் இருந்து ஒரு குரல், சாமி நீங்களும் அங்க இருந்தா வர்ரீங்க என்று எழுந்தது. அதுவே முதலும் கடைசியுமான இலக்கியக் கூட்டமானது.  

பதினோராம் வகுப்பு முடிய தினத்தந்தி பேப்பரில் ரிஸல்ட் பார்த்து (யாருக்குத் தெரியும் ரிஸல்ட் பார்ப்பது எப்படியென்று?) 72-74 என்றிருக்க பொங்கி எழுந்த கண்ணீருடன் நான் ஃபெயில் என்று திகைத்துப் போனேன். அம்மா பதைத்தபடி கட்டையில போறவனே என்னடா சொல்ற என்று அலற, ஆமாம்மா நல்லாதான் எழுதினேன். 72 பாஸ் 74 பாஸ் என் நம்பர் 73 காணோம் என்று விசும்பி, ஃபெயிலான பக்கத்து வீட்டு அண்ணன் வாங்கிப் பார்த்து 72லிருந்து 74 வரை பாஸ். நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம். (அவ்வ்வ்வ்வளவு பொது அறிவு)

எப்படியும் 18 வயது முடிய வேலைக்குப் போக வேண்டும். ஒரு வருடம் வீணாகாமல் பி.யூ.சி. படிக்கலாம் என்ற தெளிவுடன் டி.ஜி. வைணவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க, இண்டர்வியூவிற்கு அரைக்கால் டவுசருடன் போய் அட்மிஷன் கிடைத்து, சின்னப் பையன், ட்ரவுசர் பாந்தமாதான் இருக்கும்மா. பேண்ட் இல்லை என்றால் வேட்டியுடந்தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலில் முதன் முதலாக கரும்பச்சை, மற்றும் காப்பிப் பொடி (அழுக்குத் தெரியாமல்) காட்டன் பேண்ட் தைத்துப் போட்ட போது இன்னும் கொச்சு சந்தோஷம்.

பி.யூசி முடித்து வேலைக்கு காத்திருத்தலுக்கான அடுத்த ஒரு வருடம், பேப்பர் படிக்க மாநில கிளை நூலகத்தில் போய், கிடைத்தததைப் படித்து 12 மணிக்கு மூடும் நேரம் இறைந்து கிடந்த பேப்பர் எல்லாம் சீராக அடுக்கி வைத்துக் கிளம்புவதைக் கண்ட நூலகர் மெதுவே தன் மேசை எதிரில் அமர்ந்து படிக்க அனுமதித்தார். ஓரிரு மாதங்களில் அவர் வேலையாக வெளியே செல்ல நேரிடின், ரம்ஜான் நோன்பு காலத்தில் என்று முற்று முழுதாக நூலகப் பொறுப்பு என்னுடையதாயிற்று. பதின்ம வயதில் புத்தகங்களுடனான அந்த ஒரு வருடம் இன்று வரை தொடரும் மிகப் பெரிய கொச்சு சந்தோஷம்.

முத்தாய்ப்பாய் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் என்று சலித்துப் போய், ரயில்வேயில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் என் கையில் சேர்ந்த போது என் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது விதி.

கொசுவத்திக்கான என் அழைப்பு திரு கதிர், ஆரூரன் அவர்களுக்கு. (ஹெ ஹெ. கதிர்! சரக்கு இதோ! இடுகை எங்க?))

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.